Nelson biography in tamil
தங்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உருவாகும் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்து பவர்களையே உலக சரித்திரம் அதிகமாக நினைவில் வைத்திருக்கிறது. அப்படி தனக்கு அமைந்த இக்கட்டான சூழல்களை அடிமைப்படுத்தப்பட்ட தன் மக்கள் விடுதலைக்காக சாதகமாக மாற்றிய விடிவெள்ளி நெல்சன் மண்டேலா.
ஒரு சம்பவம்.
நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபராக இருந்தபோது ஓர் உணவகத்துக்கு உணவருந்தச் சென்றார். அப்போது அங்கு ஒருவர் எதிர் டேபிளில் அமர்ந்து மிகவும் பயத்துடனும் நடுக்கத்துடனும் உணவருந்திக்கொண்டிருந்தார். அதிபரின் காவல் அதிகாரிகள் அந்த நபரின் உடல்மொழியைக் கவனித்து ஐயமுற்று நெல்சன் மண்டேலாவிடம் தெரிவித்தனர். நெல்சன் நிமிர்ந்து அந்த நபரைப் பார்த்தார். அவர் முகத்தில் மெலிதான புன்னகை.
``நான் சிறையில் இருந்தபோது அவர்தான் என் சிறைக் காவலர். ஒருமுறை நான் தண்ணீர் கேட்டபோது என் மீது சிறுநீர் கழித்தார். இப்போது விடுதலையாகிவிட்டேன். அதிபர் வேறல்லவா... நான் அவரை பழிதீர்ப்பேன் என்ற பயத்தில் நடுங்குகிறார்” என்றார். இதைச் சொல்லி முடித்து அந்த நபரைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை விசிவிட்டு எழுந்து சென்றார்.
காழ்ப்புணர்ச்சியும் பழிவாங்கும் குணமும் ஒருவரிடமோ, தேசத்திடமோ இருந்தால் வளர முடியாது. அதே சமயம் அனைவரையும் அரவணைக்கும் குணம் ஒருவரிடம் இருக்குமேயானால் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே படைக்கலாம். அப்படி ஒரு சாம்ராஜ்ஜியத்தைப் படைத்த நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினம் இன்று...
நெல்சன் மண்டேலா 1918-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ம்தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர்தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர், `நெல்சன் ரோலிக்லாலா மண்டேலா'. ரோலிக்லாலா என்றால் சோசா மொழியில் `தொல்லைகள் கொடுப்பவன்' என்றுபொருள். தன் பெயருக்கு ஏற்றாற்போல் நிற வெறியர்களுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் தொல்லை கொடுத்தார் நெல்சன் மண்டேலா.
தன் குடும்பத்திலிருந்து முதன்முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள `நெல்சன்' இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி குழு போராட்டத்தில் ஈடுபட்டார் மண்டேலா. பின்பு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின்பு 1941-ம் ஆண்டு ஜோகன்ஸ்பெர்க் சென்று பகுதி நேரமாக சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும் தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.
அப்போது `நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்துகொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது 1958-ம் ஆண்டு `வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தன் கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர். வெள்ளையர்கள், கறுப்பர்களை அடிமைப்படுத்தியதைக் கண்ட மண்டேலா கம்யூனிஸ்ட் கூட்டத்தில் நிற பேதமில்லாமல் மக்கள் ஒன்றாக இருப்பதைக் கண்டு வியந்தார். ஆனால், அவரின் தீவிர மதப்பற்று நாத்திக கம்யூனிஸ்ட் உடன் சேர விடாமல் தடுத்தது.
``வர்க்க வேறுபாட்டுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் இனவெறிக்கு எதிராக பெரிதளவில் அக்கறை கொள்ளவில்லை'' எனவும் மண்டேலா கருதினார். பின்பு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress) கட்சியில் இணைந்து செயலாற்றினார். 1944-ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இளைஞரணி அமைக்கப்பட்டது. அவரது அணுகுமுறையும் திட்டமிட்ட செயல்பாடுகளும் அனைவரையும் கட்சியில் ஈர்த்தது. தனது செயல்பாடுகளால் சகாக்களின் பாராட்டுகளைப் பெற்ற மண்டேலா 1947-ல் இளைஞரணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பல்வேறு தலைவர்களைச் சந்தித்து இன அடிப்படையிலான பிரசாரங்கள் செய்தார் மண்டேலா. நிலத்தை மறுபங்கீடு செய்வது, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கல்வி மற்றும் கலாசாரம் குறித்தும் பிரசாரம் செய்து வந்தார் மண்டேலா. மறியல் செய்வது, வேலை நிறுத்தம் செய்வது, அமைதியான வழியில் போராட்டம் செய்வது, ஒத்துழையாமை போன்ற ஆயுதம் இல்லாத போராட்டங்களைப் பயன்படுத்தி இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும் என்றனர் கட்சியின் இளைஞரணியினர். நாடு முழுவதும் பயணித்து இன அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பிரசாரம் செய்தார் மண்டேலா. அமைதியான வழியில் எதிர்ப்பு தெரிவிப்பதே மண்டேலாவின் நோக்கமாக இருந்தது. மண்டேலா கைதும் செய்யப்பட்டார். அரசாங்கத்தின் விசாரணையிலும் அமைதியான வழியில் மக்களைத் திரட்டியது உறுதியானது.
ஆனாலும், கம்யூனிஸ்ட்களை அடக்கி ஒடுக்கும் சட்டத்தை எதிர்த்ததாக மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1952-ல் தொடங்கிய அநியாயமான சட்ட எதிர்ப்புப் போராட்டம், முடிவுக்கு வந்ததை அடுத்து மண்டேலா தண்டனை தளர்த்தப்பட்டது. எந்த விதமான பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த 6 மாத தடையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மண்டேலா, தன்னுடைய சட்டப் படிப்பை முடித்தார். அதோடு தன்னுடைய வழக்கறிஞர் பணிக்கான அனுமதியையும் பெற்றார். ஆலிவர் பாம்போ என்பவருடன் இணைந்து ஜோகன்னஸ் பெர்க்கில் வழக்கறிஞர் பணியிலும் ஈடுபட்டார் மண்டேலா.
சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய பணிகளின் பயனாக, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆங்கிலேயே அரசின் கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த மண்டேலா 1950-ல் பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ``ஆங்கிலேயர் மட்டும் அங்கம் வகிக்கும் நீதிமன்றம் தன்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது'' என அறிவித்தார். ``இனவாதத்தை நான் வெறுக்கிறேன். எந்த இனத்திடமிருந்து தோன்றினாலும் இனவாதம் காட்டுமிராண்டித்தனமானதே" என நீதிமன்றத்தில் முழங்கினார் மண்டேலா.
மண்டேலா 1962-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவைப்போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் இல்லை. பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்தநிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோத்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.
பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாகக் கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரைப் படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலகத் தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்குத் திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது ``இனவெறி ஆட்சியைத் தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். நமக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்" என்று முழங்கினார்.
1994 மே 10-ம் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது வெள்ளை இனமல்லாத ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்தார். வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் அவர் அமைச்சரவையில் இடம்பெற்றனர். 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்குப் போட்டியிட மறுத்துவிட்டார். மனித உரிமைப் போராட்டங்களில் தொடர்ந்து போராடிய மண்டேலா 2008, ஜுன் மாதத்தில் பொதுவாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
வயது முதிர்ச்சி, மூச்சுக் குழல் சார்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது எனத் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்தது.
மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 ஜூன் 27-ம்தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டுக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர். 5 டிசம்பர் 2013 அன்று தனது 95-வது வயதில் சிகிச்சை பலனின்றி காலமானார். உலகமே திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது. டிசம்பர் 15-ம் தேதி அவரது சொந்த கிராமமான இயூனுவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1993-ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1992-ம் நிஷானிய பாகிஸ்தான் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இனவெறியற்ற அணு ஆயுதங்கள் இல்லா ஓர் அமைதியான உலகை உருவாக்க வேண்டும் என அவரது கனவு நனவாக்கப்பட வேண்டும் என்பதே நாம் அவருக்கு செய்ய வேண்டிய அஞ்சலி.